மக்கள் சேவைகளை வேகமான, வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மின்னாளுமை ஊக்குவிக்கப்படும் தமிழக அரசின் புதிய கொள்கை வெளியீடு


மக்கள் சேவைகளை வேகமான, வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மின்னாளுமை ஊக்குவிக்கப்படும் தமிழக அரசின் புதிய கொள்கை வெளியீடு
x
தினத்தந்தி 20 Sept 2020 5:15 AM IST (Updated: 20 Sept 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் சேவைகளை வேகமான, வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மின்னாளுமை ஊக்குவிக்கப்படும் என்று தமிழக அரசின் புதிய கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை,

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) சார்பில் நேற்று நடந்த கனெக்ட் மாநாடு நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை, தமிழ்நாடு நம்பிக்கை இணைய கொள்கை, தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சமீபத்திய ஆண்டுகளில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில்தான் தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த பிரிவில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அனுபவத்தில் இருந்து கற்றல், அறிவாற்றல், விதிகள் அடிப்படையிலான பகுந்தாய்வு, அடையாள அங்கீகாரம், இயற்கையான மொழி புரிதல், மாற்று அம்சங்கள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு போன்றவை செயற்கை நுண்ணறிவு முறையின் சில அடிப்படை தன்மைகளாகும். செயற்கை நுண்ணறிவை அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், ஒரு சார்பில்லாத நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடியதாக உருவாக்குவதுதான் அரசின் நோக்கமாகும்.

மேலும், வேகமான, பாதுகாப்பாக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொதுச் சேவைகளை செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மின்னாளுமையை ஊக்குவிப்பது, அரசின் மூன்று பிரிவுகளில் அதாவது சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவை ஏற்பதற்கான உதவிகளை மேற்கொள்வது போன்றவை நோக்கமாக உள்ளன.அரசுத் துறைகளில் அனைத்தையும் உள்ளடக்கிய பாதுகாப்பான, நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவை உருவாக்கி, அதன் உதவியுடன் முடிவெடுக்கும் முறைகளில் சமநிலை, வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை ஆகிவற்றை ஏற்படுத்த வேண்டும்.

பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அதைக் கொண்டு வருவதற்கு முன்பு அதை மதிப்பிடுவதற்கான வழிகாட்டிகள் வகுக்கப்பட வேண்டும்.

சீரழிவை ஏற்படுத்தும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு, 21-ம் நூற்றாண்டில் அதுதொடர்பான கொள்கைகளை வகுப்பதில் புதிய சவால்களை உருவாக்குகிறது. ஆனால் மனிதனின் பல அம்சங்களில் இது அவனது வாழ்க்கையை தொடக்கூடியதாக உள்ளது. மருத்துவ பரிசோதனைகள், போக்குவரத்து, மருந்து கண்டுபிடிப்பு, சட்டத்தை அமல்படுத்துவது, ராணுவம், விண்வெளி ஆய்வு, கல்வி, நிர்வாகம், முதியோர் உதவி என பல அம்சங்களையும் செயற்கை நுண்ணறிவு தொட்டுச் செல்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இணையதள பாதுகாப்பு கொள்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஏராளமான வரம்பற்ற தகவல்களை மேலாண்மை செய்வதற்கான பாதுகாப்பான உள்கட்டமைப்பு, தமிழக அரசுக்கும், மக்களுக்கும் அவசிய தேவையாக உள்ளது. உள்கட்டமைப்பு மாறும் தரவின் பாதுகாப்பு, அரசுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.

அரசு சேவைகளை அளிப்பதில் ஒரு பாதுகாப்பான வடிவம் இருப்பது, அரசு மற்றும் மக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்கும். தகவல் பாதுகாப்பு மீறப்படும்போது, தரவையும் சேவைகளையும் மீட்டெடுக்க இது உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘பிளாக் செயின்’ பாலிசி என்ற நம்பிக்கை இணைய கொள்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசுத் துறைகளால் உருவாக்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்கள் அனைத்தையும் சரிபார்ப்பது மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரமாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். துறைகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு இது உதவும்.

இந்த தொழில்நுட்பத்தில் உலகின் தலைசிறந்த இடமாக தமிழகத்தை உருவாக்குவது அரசின் நோக்கமாகும். புதிய மின்னாளுமை அம்சங்களை கட்டமைத்து மக்களுக்கான சேவைகளை விரைவாக, முழுமையாக, பாதுகாப்பாக மற்றும் வெளிப்படையாக அளிப்பதுதான் இதன் நோக்கம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story