ஒழுக்கமற்ற மனைவிக்கு, கணவரின் ஓய்வூதியம் கிடையாது ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு


ஒழுக்கமற்ற மனைவிக்கு, கணவரின் ஓய்வூதியம் கிடையாது ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு
x
தினத்தந்தி 20 Sept 2020 5:47 AM IST (Updated: 20 Sept 2020 5:47 AM IST)
t-max-icont-min-icon

ஒழுக்கமற்ற நடத்தையின் காரணமாக பிரிந்து வாழும் மனைவிக்கு கணவரின் ஓய்வூதிய பலன் களை பெற தகுதி இல்லை என்று ஐகோர்ட்டு பரபரப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

அரசு ஊழியராக பணியாற்றிய தேவசகாயம் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு இறந்தார். இவர் முதலில் மேரி என்பவரை திருமணம் செய்தார். முதல் மனைவியின் நடத்தை சரியில்லை என்பதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரை விட்டு பிரிந்து வாழ சட்டப்படி கோர்ட்டில் 1988-ம் ஆண்டு உத்தரவு பெற்றார். பின்னர், ராணி என்பவரை 1989-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்துகொண்டார். (3 பேருடைய பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், தேவசகாயம் மரணம் அடைந்ததால், ஓய்வூதிய பண பலன்கள், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை கேட்டு ராணி விண்ணப்பம் செய்தார். இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த முதன்மை கணக்காளர் ஜெனரல், குடும்ப ஓய்வூதியம் 2-வது மனைவிக்கு வழங்க முடியாது என்று மறுத்து விட்டார். ஆனால், 2-வது மனைவியின் மூலம் பிறந்த 2 மகள்களும் ஓய்வூதிய பலன்களை பெற தகுதியானவர்கள் என்றும் ஓய்வூதிய தொகையை மூன்றாக பிரித்து, முதல் மனைவி மேரிக்கு ஒரு பங்கும், 2-வது மனைவி ராணியின் 2 மகள்களுக்கு தலா ஒரு பங்கும் வழங்க உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ராணி ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கோர்ட்டு மூலம் கணவன்-மனைவி சட்டப்படி பிரிந்து வாழ அனுமதி பெறுவது என்பது வேறு, விவாகரத்து பெறுவது என்பது வேறு. இந்த வழக்கில் தேவசகாயம் சட்டப்படி பிரிந்து வாழத்தான் கோர்ட்டில் உத்தரவு பெற்றுள்ளார். இதை விவாகரத்தாக கருதமுடியாது. அதனால், மனுதாரர் ராணிக்கும், மறைந்த அரசு ஊழியர் தேவசகாயத்துக்கும் நடந்த திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை. இதனால், மனைவி என்ற அந்தஸ்தை மனுதாரர் பெறமுடியாது. இதனடிப்படையில், 2-வது மனைவியான மனுதாரருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என்று முதன்மை கணக்காளர் ஜெனரல் உத்தரவிட்டது சரிதான்.

அதேநேரம், கோர்ட்டு மூலம் சட்டப்படி பிரிந்து வாழ உத்தரவு பெற்ற மனைவி. தன்னுடைய கணவரின் ஓய்வூதியம் பெற தகுதியானவர்தான். ஆனால், ஒழுக்கமற்ற நடத்தையின் காரணத்துக்காக பிரிந்து வாழும் உத்தரவை பெற்றிருக்கக்கூடாது.

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்படி, ஒழுக்கமின்மை காரணமாக பிரிந்த மனைவி, கணவரின் ஓய்வூதியத்தை பெற தகுதியானவர் இல்லை. இந்த வழக்கில் முதல் மனைவி ஒழுக்கமற்ற நடத்தையின் காரணத்தினால், அவரிடம் இருந்து சட்டப்படி பிரிந்து வாழ கோர்ட்டில் தேவசகாயம் உத்தரவு பெற்றுள்ளார். எனவே, ஒழுக்கமற்ற மனைவி, ஓய்வூதியம் பெற தகுதியானவர் இல்லை. அதனால், ஓய்வூதியத்தை 3 பங்காக பிரித்து வழங்கும் உத்தரவை ரத்து செய்கிறேன்.

இந்த வழக்கில் ஒழுக்கமற்ற முதல் மனைவியும், சட்டப்படி விவாகரத்து பெறாமல் கணவன் திருமணம் செய்ததால் 2-வது மனைவியும், அதாவது இருவருமே குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியானவர் இல்லை என்று முடிவு செய்கிறேன். அதேநேரம், மறைந்த அரசு ஊழியரின் ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும், 2-வது மனைவியின் மூலம் பிறந்த 2 மகள்களுக்கு சரிசமமாக பிரித்து வழங்க உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story