கும்மிடிப்பூண்டி அருகே பரிதாபம்: வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுவன் உடல் வெந்து பலி


கும்மிடிப்பூண்டி அருகே பரிதாபம்: வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுவன் உடல் வெந்து பலி
x
தினத்தந்தி 21 Sept 2020 3:09 AM IST (Updated: 21 Sept 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் உடல் வெந்து படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள குருதானமேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனா (30). இவர்களுக்கு 4 வயதில் செர்வீன் என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி சிறுவனின் பாட்டி, செர்வீனை குளிப்பாட்டுவதற்காக வெந்நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து வீட்டிற்கு வெளியே வைத்தார். குளிப்பதற்கு தயாராக இருந்த சிறுவன் செர்வீன் சூடான வெந்நீர் பாத்திரத்தின் அருகே நின்று கொண்டிருந்தான்.

அப்போது அவனது பாட்டி வீட்டிற்குள் சோப்பு எடுத்து வர சென்றார். இதற்கிடையே, சிறுவன் செர்வீன் வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்தான்.

இதில் பாத்திரத்தில் இருந்த வெந்நீர் தெளித்து சிறுவன் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடல் வெந்து காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி செர்வீன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story