தட்டார்மடம் கொலை வழக்கு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு; உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்
தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
தட்டார்மடம்,
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17ந்தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர் என கூறப்படும், தேடப்பட்டு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த திருமணவேல் உள்பட 2 பேர் இன்று சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தி, கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
இந்த கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணனை சஸ்பெண்டு செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரின் உறவினர்களிடம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நடத்திய பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கில் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர். இதனால் 4 நாட்களாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
Related Tags :
Next Story