பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு பரிந்துரைத்த கருத்துகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி உறுதி


பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு பரிந்துரைத்த கருத்துகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி உறுதி
x
தினத்தந்தி 22 Sept 2020 4:45 AM IST (Updated: 22 Sept 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்ட கருத்துகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கொரோனா ஊரடங்கால் குறைவுபட்ட தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் அறிக்கையை அக்குழுவின் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவருமான சி.ரங்கராஜன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று சமர்ப்பித்தார்.

அதன் பின்னர் இந்த உயர்மட்டக்குழுவுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-

குழுவுக்கு நன்றி

அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, விரைந்து, வேகமாக எல்லா துறைகளையும் அலசி ஆராய்ந்து 250 பக்கம் கொண்ட, என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக, தெளிவாக அரசுக்கு சமர்ப்பித்துள்ள குழுவின் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் அரசின் சார்பாக நன்றி.

கொரோனா ஒரு புதிய நோய். உலகமே அச்சத்தில் இருக்கிற இந்த சூழ்நிலையில், தமிழகம் வளர்ச்சிப் பாதையை அடைய வேண்டும், வளர்ச்சியை நோக்கி செல்ல எவ்வாறு கையாள வேண்டும் போன்ற விவரங்களை உள்ளடக்கி, சுருக்கமான கருத்துக்களை இங்கே தெரிவித்திருக்கிறீர்கள்.

அரசு அவற்றை உரியமுறையில் பரிசீலித்து, குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விஷயங்களை உன்னிப்பாக ஆராய்ந்து தமிழகத்தின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கும், வளர்ச்சியை நோக்கி செல்வதற்கும் உங்களுடைய கருத்துகளை அரசு கவனமாக எடுத்துக்கொள்ளும்.

எங்களது வேண்டுகோளை ஏற்று கொரோனா நோய் தொற்று இருக்கும் சோதனையான காலகட்டத்தில்கூட, அரசாங்கத்திற்கு உதவி செய்ய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு தங்களது சொந்த பணிகளையெல்லாம் விட்டுவிட்டு, அரசுக்கு துணை நின்ற இக்குழுவின் தலைவர் சி.ரங்கராஜனுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசின் சார்பாக நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story