பிரபல ரவுடி ஸ்ரீதர் கூட்டாளிகளான காஞ்சீபுரம் ரவுடிகள் உள்பட 20 பேர் கைது


பிரபல ரவுடி ஸ்ரீதர் கூட்டாளிகளான காஞ்சீபுரம் ரவுடிகள் உள்பட 20 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2020 3:15 AM IST (Updated: 22 Sept 2020 2:51 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த பிரபல ரவுடிகள் 20 பேர் கோவா மாநில ஓட்டலில் பதுங்கி இருந்த நிலையில், தமிழக போலீசாரால் மடக்கி பிடித்து கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கொலை, வழிப்பறி, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 20 ரவுடிகளை கோவா மாநிலத்தில் போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.

இதுகுறித்து காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் முக்கிய கூட்டாளிகளான ரவுடி தினேஷ்குமார் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட சுமார் 30 வழக்குகளும், ரவுடி தியாகு என்பவர் மீது 8 கொலை வழக்குகள் உள்பட சுமார் 61 வழக்குகளும் உள்ளன.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் காஞ்சீபுரத்தில் பிரபல ரவுடிகளாக வலம் வந்து காஞ்சீபுரத்தில் உள்ள பொதுமக்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி பணம் பறித்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் இருவரும் இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெரிய காஞ்சீபுரம் போலீசார் 2 பேரையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். பின்னர், கடந்த ஜூன் மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த 2 ரவுடிகளும் சுமார் 4 மாதங்களாக தலைமறைவாக இருந்து தொடர்ந்து பொதுமக்களை, வணிக நிறுவனர்களை தொலைபேசி மூலம் மிரட்டியும், கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர். காஞ்சீபுரம் ரவுடி கும்பல் சென்னை, கடலூர், திருவள்ளூர் போன்ற மாவட்டத்தில் இருக்கும் முக்கிய குற்றவாளிகளோடு தொடர்பு ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது.

எனவே வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பி.நாகராஜன் உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா மேற்பார்வையில் தனிப்படைகள் மராட்டியம், கோவா உள்பட பல மாநிலங்களில் ரவுடிகள் பதுங்கி இருப்பதை அறிந்து அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

இந்த நிலையில், கோவா மாநிலத்தில் உள்ள வெவ்வேறு ஓட்டல்களில் பதுங்கி இருந்த காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகளான தினேஷ்குமார் (39), தியாகு (29), ராஜா (24), அருண்குமார் (21) உள்பட 15 பேரும், கடலூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியான சுரேந்தர் (37), திருவள்ளூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த செங்குன்றம், காந்தி நகரைச் சேர்ந்த ரவுடிகளான சேதுபதி (26), சுகேஸ்வரன் (30) மற்றும் செங்கல்பட்டு சேலையூரை சேர்ந்த காந்தி (37) உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து எந்தவித ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை.

மேலும், இதில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடியான தியாகு, தினேஷ் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ரவுடி தியாகு 6 முறை குண்டர் சட்டத்திலும், தினேஷ் 4 முறை குண்டர் சட்டத்திலும் ஜெயிலில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் 109 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் சில ரவுடிகளை விரைவில் கூண்டோடு கைது செய்வோம். செங்கல்பட்டில் 176 ரவுடிகளை கைது செய்துள்ளோம். திருவள்ளூர் மாவட்டத்தில் 88 ரவுடிகளை கைது செய்துள்ளோம். ஆக மொத்தம் 373 ரவுடிகளை கைது செய்துள்ளோம்.

காஞ்சீபுரத்தில் அடிக்கடி பொதுமக்களை மிரட்டியும், கொலை, கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீது என்கவுண்ட்டர் பாயுமா என்ற கேள்விக்கு, தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கும் பொதுமக்கள், நில விற்பனையாளர்கள், நில உரியமையாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் மேற்படி ரவுடிகளை கூண்டோடு கைது செய்த தனிப்படையினரை உயர் அதிகாரிகள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை, மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story