பூந்தமல்லி அருகே பட்டப்பகலில் பயங்கரம் கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் குத்திக்கொலை


பூந்தமல்லி அருகே பட்டப்பகலில் பயங்கரம் கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 22 Sept 2020 3:30 AM IST (Updated: 22 Sept 2020 2:57 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்துவிட்டு நகை, செல்போனை கொள்ளையடித்து சென்ற கட்டிடத் தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், பி.ஜி.அவென்யூ, 4-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுடைய மகள் மீனா(வயது 20). இவர், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று சந்திரசேகர்-தனலட்சுமி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மீனா மட்டும் தனியாக இருந்தார். இவர்களது வீட்டின் மேல் தளத்தில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக வேலைக்கு ஆட்கள் வந்துள்ளார்களா? என்பது குறித்து கேட்க தனலட்சுமி தனது மகள் மீனாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. மீண்டும் சிறிதுநேரம் கழித்து தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த தனலட்சுமி, பக்கத்து வீட்டு பெண்ணிடம் கூறி வீட்டில் சென்று பார்க்கும்படி கூறினார். அந்த பெண் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டின் இரும்பு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மரக்கதவு திறந்து கிடந்தது.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மீனா, கழுத்தில் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டுஅதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போரூர் உதவி கமிஷனர் சம்பத், பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையிலான போலீசார் கொலையான கல்லூரி மாணவி மீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மீனாவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் மீனா அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் செல்போனையும் காணவில்லை. இதனால் நகை, செல்போனுக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மீனா வீட்டின் மேல் தளத்தில் கட்டிட வேலை நடந்து வருகிறது. நேற்று அவரது பெற்றோர் வீட்டில் இருக்கும்போது கட்டிட வேலைக்கு கொத்தனார் ஒருவர் வந்தார். பின்னர் வேறு ஒருவரை அழைத்து வருவதாக கூறி சென்றுவிட்டார். மீனா கொலைக்கு பிறகு அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் என வந்ததால் அவரது வீட்டு முகவரியை கண்டுபிடித்து போலீசார் சென்றபோது வீடு பூட்டி இருந்தது.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்தக்கறை படிந்த சட்டை மற்றும் ஒரு செல்போன் இருந்தது. அந்த செல்போனை மீனாவின் உறவினர்களிடம் காண்பித்தபோது அது மீனாவின் செல்போன் என உறுதியானது. இதையடுத்து தலைமறைவாக உள்ள கட்டிடத்தொழிலாளியை போலீசார் தேடி வந்தனர்.

வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வந்துள்ள அந்த நபர், மீனாவிடம் நகையை பறிக்க முயன்றபோது அவர் சத்தம் போட்டுள்ளார். உடனே அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மீனாவின் தொண்டையில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மீனா கீழே விழுந்து இறந்து உள்ளார். பின்னர் மீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்று விட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தலைமறைவாக இருந்த கட்டிடத்தொழிலாளி சண்முகம்(42) என்பவரை பூந்தமல்லி தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் கைது செய்தனர். மீனாவை கொலை செய்து விட்டு நண்பரின் மோட்டார் சைக்கிளிலேயே விழுப்புரம் தப்பியது தெரிந்தது. கைதான அவரை போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story