பெற்றோர் சம்மதம் இன்றி நடந்த திருமணம் தொடர்பான வழக்குகள் எத்தனை? பதில் அளிக்க அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


பெற்றோர் சம்மதம் இன்றி நடந்த திருமணம் தொடர்பான வழக்குகள் எத்தனை? பதில் அளிக்க அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Sept 2020 3:26 AM IST (Updated: 22 Sept 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டில் குன்றத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மாயமான தனது 16 வயது மகளை மீட்டுத்தர கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் குன்றத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மாயமான தனது 16 வயது மகளை மீட்டுத்தர கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது காணொலி காட்சி மூலம், சிறுமியை போலீசார் ஆஜர்படுத்தினர். சிறுமி ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணியாற்றி வந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதை மறைத்து சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘சென்னை ஐகோர்ட்டுக்கு வரும் இதுபோன்ற பல வழக்குகளில், பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?’ என கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Next Story