பள்ளிக்கூடத்தில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பரிதாப முடிவு


பள்ளிக்கூடத்தில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பரிதாப முடிவு
x
தினத்தந்தி 23 Sept 2020 4:22 AM IST (Updated: 23 Sept 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூட வகுப்பறையில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பரிதாப முடிவை எடுத்துள்ளார்.

தலைவாசல்,

தர்மபுரி டவுன் பெரியார் சிலை அருகில் அண்ணா நகரை சேர்ந்தவர் அருண். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 28). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 மாதங்களாக சேலம் மாவட்டம் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு போலீஸ்காரராக பணிபுரிந்தார். இரவு நேரத்தில் தலைவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒரு அறையில் தங்கி கொள்வார். காலையில் போலீஸ் நிலையத்துக்கு வேலைக்கு சென்று விடுவார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது உறவினர் வெற்றி, தம்பி ஹரிராஜன் ஆகியோரிடம், தான் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருப்பதாகவும், என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் வேதனையுடன் செல்போனில் பேசி உள்ளார். இதை கேட்ட வெற்றி, ஹரிராஜன் ஆகிய 2 பேரும் தர்மபுரியில் இருந்து புறப்பட்டு மோட்டார்சைக்கிளில் தலைவாசலுக்கு இரவு 12.30 மணிக்கு வந்தனர்.

பின்னர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று பார்த்தனர். அங்கு பள்ளிக்கூடத்தில் அவர் தங்கியிருந்த வகுப்பறையில் லுங்கியில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். இதை பார்த்த இருவரும் லுங்கியை பிளேடால் அறுத்து கீழே இறக்கி 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளரை வரவழைத்து சோதித்து பார்த்துள்ளனர். மருத்துவ பணியாளர் பரிசோதித்து பார்த்துவிட்டு, வெங்கடேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஹரிராஜன் தலைவாசல் போலீஸ் நிலையத்திற்கு சென்று தெரிவித்தார். போலீசார் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேஷ் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெங்கடேஷ், போலீஸ் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகள் ஆகிறது. திருமணமாகாதவர்.

வெங்கடேசுக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த பரிதாப முடிவை எடுத்தாரா? என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story