இந்திய நீதித்துறை வரலாற்றில் புதுமை ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவி ஏற்கும் கணவன்-மனைவி


இந்திய நீதித்துறை வரலாற்றில் புதுமை ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவி ஏற்கும் கணவன்-மனைவி
x
தினத்தந்தி 25 Sept 2020 3:30 AM IST (Updated: 25 Sept 2020 1:40 AM IST)
t-max-icont-min-icon

இந்திய நீதித்துறை வரலாற்றில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக கணவன்-மனைவி ஒரே நேரத்தில் பதவி ஏற்க உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 10 மாவட்ட முதன்மை நீதிபதிகளை, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவர்களை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.

ஆனால், சென்னை ஐகோர்ட்டுக்கு 10 புதிய நீதிபதிகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியான சம்பவமாக இருந்தாலும், இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால் 10 பேரில் இருவர் கணவன்-மனைவி என்பது தான். 10 பேரில் நீதிபதிகள் கே.முரளிசங்கர், எஸ்.டி.தமிழ்செல்வி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கணவன்-மனைவி ஆவர்.

இருவரும் 1968-ம் ஆண்டு பிறந்தவர்கள். சட்டப்படிப்பை முடித்து 1995-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ளனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி கே.முரளிசங்கர், 1985-1990-ம் ஆண்டு கோவை அரசு சட்டக்கல்லூரியில் படித்தார். சட்டப்படிப்பை முடித்து விட்டு, கோவையில் வக்கீலாக பணியாற்றி வந்தார். அதேபோல ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த நீதிபதி எஸ்.டி.தமிழ்செல்வி, புதுச்சேரி சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். இருவரும் ஒரே நேரத்தில் மாஜிஸ்திரேட்டாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்றனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து, 1996-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாக கே.முரளிசங்கரும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதித்துறை பதிவாளராக நீதிபதி எஸ்.டி.தமிழ்செல்வியும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் சட்டப்படிப்பை படித்து வருகிறார். இந்திய நீதித்துறை வரலாற்றில் கீழ் கோர்ட்டு நீதிபதிகளாக இருக்கும் கணவன், மனைவி ஒன்றாக ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளது இதுவே முதல் முறை என்று வக்கீல்கள் மத்தியில் பெருமையாக பேசப்படுகிறது.

Next Story