நாடாளுமன்ற தேர்தலின்போது ரூ.11½ கோடி பறிமுதல்:வேலூர் தி.மு.க. பிரமுகர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை விசாரணைக்கு ஆஜராகும்படி ‘சம்மன்’


நாடாளுமன்ற தேர்தலின்போது ரூ.11½ கோடி பறிமுதல்:வேலூர் தி.மு.க. பிரமுகர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை விசாரணைக்கு ஆஜராகும்படி ‘சம்மன்’
x
தினத்தந்தி 25 Sept 2020 4:50 AM IST (Updated: 25 Sept 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலின்போது ரூ.11½ கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நேற்று வேலூர் தி.மு.க. பிரமுகர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை நடத்தினர். அப்போது வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கினர்.

வேலூர்,

இந்திய நாடாளுமன்றத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில், தி.மு.க. வேலூர் மாநகர விவசாய அணி அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் உறவினர் தாமோதரனுக்கு சொந்தமான குடோனில் ரூ.11 கோடியே 50 லட்சம் கைப்பற்றப்பட்டது.

பணத்துடன் பூத்வாரியாக, வாக்காளர் பட்டியலும் இருந்ததால் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அந்த பணம் வைக்கப்பட்டிருந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பூஞ்சோலை சீனிவாசன், அவருடைய உறவினர் தாமோதரன், பணத்தை மாற்றிக்கொடுத்த வங்கி மேலாளர் தயாநிதி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்காரணமாக வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஆகஸ்டு மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வெற்றிபெற்று எம்.பி. ஆனார்.

இந்த நிலையில் நேற்று காலை சென்னையை சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ரூ.11½ கோடி சம்பந்தமாக பூஞ்சோலை சீனிவாசனிடம் நீண்டநேரம் விசாரணை நடத்தினர். மேலும் சீனிவாசன் வீடு, அவருடைய உறவினர் தாமோதரன் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தியதாகவும், அப்போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ஒரு டைரியை அவர்கள் எடுத்துச்சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கியதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து பூஞ்சோலை சீனிவாசன் கூறுகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை எதுவும் நடத்தவில்லை. விசாரணை மட்டுமே நடத்தினார்கள். மேலும் விசாரணைக்கு அழைக்கும்போது வருமாறு சம்மன் வழங்கினார்கள் என்று கூறினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது பேசிய கதிர்ஆனந்த் எம்.பி., டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தபோது உளவுத்துறை அதிகாரிகள் என்று கூறி அடையாளம் தெரியாத சில நபர்கள் தன்னை மிரட்டியதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story