மாநில செய்திகள்

தலைமை ஆசிரியர் மனைவி கொலை: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது பரபரப்பு வாக்குமூலம் + "||" + Vijay fan club administrator arrested with fake girlfriend

தலைமை ஆசிரியர் மனைவி கொலை: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது பரபரப்பு வாக்குமூலம்

தலைமை ஆசிரியர் மனைவி கொலை: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது பரபரப்பு வாக்குமூலம்
தலைமை ஆசிரியர் மனைவி இரும்பு பைப்பால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி

நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் ஆனந்த ஜோதி(வயது 53). இவர், கொள்ளிடம் ஒன்றியம் ஓதவந்தான்குடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா(49). இவர்களுக்கு சுரேஷ்(26) என்ற மகனும், சுவாதி(20) என்ற மகளும் உள்ளனர்.


கடந்த 18-ந் தேதி அதிகாலையில் சித்ரா எழுந்து தனது வீட்டு வாசல் முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு வாலிபர், கோலம் போட்டுக் கொண்டிருந்த சித்ராவின் தலையில் இரும்பு பைப்பால் தாக்கினார். பின்னர் முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சித்ரா பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சீர்காழி நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட சித்ராவின் வீட்டு மாடியில் குடியிருந்து வரும் செல்வகுமார் என்பவரின் மனைவி பிருந்தாவின் செல்போன் எண்களையும் கண்காணித்து வந்தனர்.

அப்போது பிருந்தா, சீர்காழி அருகே கணபதி நகரை சேர்ந்த தாஜூதீன் மகன் சையது ரியாசுதீன்(29) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. விஜய் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகியாக உள்ள சையது ரியாசுதீன், ஜல்லி எம்-சாண்ட் வியாபாரமும் செய்து வந்தார்.

இதனையடுத்து போலீசார் சையது ரியாசுதீனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சையது ரியாசுதீன், சித்ராவை தான் கொலை செய்ததாக கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து சீர்காழி போலீசார் சையது ரியாசுதீனிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையின்போது சையது ரியாசுதீன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

சீர்காழி அருகே சேத்தூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகள் பிருந்தா(27) என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு சீர்காழியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் சையது ரியாசுதீன் சந்தித்து உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை தொடர்ந்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிருந்தாவை அவரது பெற்றோர், கடந்த 2016-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் கீரைக்கார தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இவர்களுக்கு 3 வயதில் லக்கி சாய் என்ற மகன் உள்ளான். பிருந்தாவின் கணவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இவர்களுக்கு இடையே அடிக்கடி நெருக்கம் அதிகரித்ததால் பிருந்தா தனது கைக்குழந்தையோடு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சீர்காழி வந்து விட்டார். கொலை செய்யப்பட்ட சித்ராவின் வீட்டின் மாடியில் ஒரு பகுதியில் வாடகைக்கு குடியிருந்தார்.

தனியாக வசித்து வரும் பிருந்தாவின் வீட்டிற்கு சையது ரியாசுதீன் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டின் உரிமையாளர் சித்ராவிடம் புகார் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை சித்ரா பலமுறை கண்டித்துள்ளார். அதை இருவரும் கேட்காமல் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர். இதனால் தனது வீட்டை காலி செய்யுமாறு சித்ரா பிருந்தாவிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலர்கள் இருவரும் தங்கள் உல்லாசத்துக்கு இடையூறாக இருக்கும் சித்ராவை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.

தினமும் அதிகாலையில் எழுந்து சித்ரா வாசலில் கோலம் போடுவார் என பிருந்தா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்துள்ளார். கடந்த 18-ந் தேதி அதிகாலையில் முன்கூட்டியே சித்ராவின் வீட்டு வாசல் முன்பு மறைவான பகுதியில் இரும்பு பைப்புடன் சையது ரியாசுதீன் தயாராக இருந்து உள்ளார். அப்போது வழக்கம்போல் கோலம் போட வந்த சித்ராவின் தலையில் இரும்பு பைப்பால் தாக்கி கொலை செய்து உள்ளார்.

அவர் இறந்ததை உறுதி செய்த பின்பு இரும்பு பைப்பை அருகில் இருந்த கழுமலை ஆற்றோரம் வீசிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று உள்ளார். மறுநாள் ஒன்றும் தெரியாததுபோல் கள்ளக்காதலியை சந்தித்து சென்று உள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது ரியாசுதீனை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த பிருந்தா மீதும் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தரணிதரன் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.