தமிழகத்தில் இதுவரை 23 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் ஒரே நாளில் 1,089 பேருக்கு தொற்று


தமிழகத்தில் இதுவரை 23 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் ஒரே நாளில் 1,089 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 25 Sept 2020 5:15 AM IST (Updated: 25 Sept 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 23 ஆயிரத்து 22 குழந்தைகள் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,089 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 88 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,546 ஆண்கள், 2,146 பெண்கள் என மொத்தம் 5,692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 109 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 653 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,089 பேரும், கோவையில் 642 பேரும், சேலத்தில் 311 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 21 பேரும், ராமநாதபுரத்தில் 16 பேரும் பாதிக் கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 66 லட்சத்து 8 ஆயிரத்து 675 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 15 ஆண்களும், 2 லட்சத்து 23 ஆயிரத்து 646 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 30 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 23 ஆயிரத்து 22 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 72 ஆயிரத்து 613 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 43 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேரும் என 66 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 15 பேரும், திருப்பூரில் 9 பேரும், கோவையில் 6 பேரும், சேலத்தில் 5 பேரும், வேலூரில் 4 பேரும், திருவண்ணாமலையில் 3 பேரும், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூரில் தலா இருவரும், விருதுநகர், விழுப்புரம், நெல்லை, திருவாரூர், தேனி, தென்காசி, நாமக்கல், நாகப்பட்டினம், மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், காஞ்சீபுரம், கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, கடலூரில் தலா ஒருவரும் என 26 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 76 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 470 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,005 பேரும், கோவையில் 613 பேரும், கடலூரில் 514 பேரும் அடங்குவர். இதுவரையில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 210 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 405 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 934 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 257 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 577 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 66 அரசு நிறுவனங்கள் மற்றும் 112 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 178 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story