2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவர் கொலை; தாய்-மகன் கைது
அரும்பாக்கத்தில் 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவரை கொலை செய்ததாக தாய்-மகனை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை அரும்பாக்கம், திருவேங்கடகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் ஸ்ரீராம் (வயது 19). சென்னையில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டில் ராஜா என்பவர் சில ஆண்டுகளாக குடும்பத்துடன் லீசுக்கு இருந்து வருகிறார்.
நேற்று மதியம் குப்புசாமி வீட்டின் 2-வது மாடியில் உள்ள ஒரு வீடு காலியானது. அந்த வீட்டுக்கு ராஜாவின் மகன் சங்கர்(28) பூட்டு போட்டு வைத்திருந்தார். அந்த பூட்டை ஸ்ரீராம் உடைக்க முயன்றார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
அப்போது தள்ளிவிட்டதில் 2-வது மாடியிலிருந்து ஸ்ரீராம் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீராம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அதில் லீசுக்கு இருக்கும் ராஜா, வீட்டின் உரிமையாளர் குப்புசாமிக்கு ரூ.5 லட்சம் லீசுக்கான பணத்துடன், மேலும் ரூ.2 லட்சம் கடன் வாங்கியும் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த கடன் தொகைக்கு வட்டி செலுத்தவில்லை. அசல் தொகையும் தரவில்லை என்பதால் தனக்கு பணம் கொடுக்கும் வரை அந்த வீட்டுக்கு யாரும் வாடகைக்கு வரக்கூடாது என்பதற்காக ராஜாவின் மகன் சங்கர், மாடியில் உள்ள வீட்டுக்கு பூட்டு போட்டு விட்டதாகவும், அந்த பூட்டை உடைக்கும் போது ஏற்பட்ட தகராறில் மாடியில் இருந்து தள்ளி விட்டதில் ஸ்ரீராம் கீழே விழுந்து இறந்ததும் தெரிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் (28) மற்றும் அவரது தாய் பானு (46) ஆகிய 2 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story