ஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு - 90 சதவீத மாணவர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் எழுதினர்


ஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு - 90 சதவீத மாணவர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் எழுதினர்
x
தினத்தந்தி 25 Sept 2020 8:28 AM IST (Updated: 25 Sept 2020 8:28 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மூலம் தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வை 90 சதவீத மாணவர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் எழுதினர்

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் முறையாக மாணவர்கள் ஆன்லைனில் தேர்வை சந்திப்பதால், அதற்கு முன்னோட்டமாக மாதிரி தேர்வு கடந்த 19, 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 22-தேதி ‘பிராஜெக்ட்’ மற்றும் நேர்காணல் (வைவா வோஸ்) தேர்வு நடைபெற்றது. தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பல்வேறு கட்ட அறிவிப்புகளை வெளியிட்டது.

கடந்த சில நாட்களாக சில பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் தேர்வு நடத்தியதில் அதில் முழுவதுமாக வெற்றிபெறவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாணவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. அதேபோல், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. அதிலும் மாணவர்கள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் தவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு (கொள்குறி வகை வினாக்கள்) ஆன்லைனில் நேற்று தொடங்கியது. மாதிரி தேர்வு நடந்த நேரத்தில், சில தொழில்நுட்ப கோளாறு பிரச்சினை இருந்தது. அதனை சரிசெய்து, இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதனால் 90 சதவீத மாணவ-மாணவிகள் எந்த சிக்கலும் இல்லாமல் தேர்வை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதர 10 சதவீத மாணவர்களுக்கு செல்போன் பிரச்சினை, இணையதள கோளாறு போன்ற காரணங்களால் எழுத முடியாமல் போனதாகவும், அவர்களுக்கு பின்னர் தேர்வு நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இனிவரும் தேர்வுகளிலும் எந்த சிக்கலும் இல்லாத வகையில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Next Story