எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு; திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் இரங்கல்


எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு;  திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 25 Sept 2020 2:05 PM IST (Updated: 25 Sept 2020 2:05 PM IST)
t-max-icont-min-icon

51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் திடீரென்று நேற்று மோசம் அடைந்தது.

சென்னை,

திரையுலகில் 50 ஆண்டுகளாக பல்லாயிரம் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும் விரைவில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்றும் வீடியோவில் அவர் பேசி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தியும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் விழிப்புடன் இருக்கிறார் என்றும் பேசுவதை புரிந்து கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மறுத்தார். கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டார் என்றும் கூறினார். இதனால் ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் திடீரென்று நேற்று மோசம் அடைந்தது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற்று மீண்டு வருவார் என ரசிகர்கள், திரையுலகினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில்,  பேரிடியாக அவரது மறைவு செய்தி வந்தது. 

இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி பாலசுப்பிரமணியம் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.  எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு செய்தி, அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story