புதிய வேளாண் திட்டங்களால் பொதுவினியோக திட்டம் ரத்தாகுமா? - அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்


புதிய வேளாண் திட்டங்களால் பொதுவினியோக திட்டம் ரத்தாகுமா? - அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்
x
தினத்தந்தி 1 Oct 2020 3:43 AM IST (Updated: 1 Oct 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் திட்டங்களால் பொது வினியோக திட்டம் ரத்தாகுமா? என்பதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடலூர் வந்தார். தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கூட்டுறவுத்துறைக்கு 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள், துறை ரீதியாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மாவட்டந்தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறோம். 7-வது மாவட்டமாக இங்கு ஆய்வு நடத்தி உள்ளோம். மற்ற மாவட்டங்களை விட கடலூர் மாவட்டத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.

ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள், எடை குறைவாக இருப்பதாக புகார் வருவதாக கூறுகிறீர்கள். அப்படி எடை குறைவாக பொருட்கள் வழங்கினால், அதை விற்பனையாளர்கள் இறக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறோம். எடை போட்டு தான் வாங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். அதனால் எந்த கடையிலும் குறைவான எடையில் பொருட்கள் வழங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வராது.

பயோ மெட்ரிக் முறை இன்று (வியாழக்கிழமை) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்படுகிறது. இது பற்றி பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பயோ மெட்ரிக் முறையில் பிரச்சினை ஏற்பட்டால் கூடுதலாக சர்வர் பயன்படுத்தப்படும். அதேபோல் ஓ.டி.பி. எண் வழங்குகிறோம். அதுவும் இல்லையென்றால் ஆதார் கார்டை காண்பிக்கலாம். ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் யாரையும் விற்பனையாளர்கள் திருப்பி அனுப்பமாட்டார்கள். உரிய பொருட்களை வாங்கி செல்லலாம்.

புதிய வேளாண்மை திட்டம் வந்தால் பொது வினியோக திட்டம் ரத்தாகும், அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்படும் என்ற குற்றச்சாட்டு உள்ளதாக கேட்கிறீர்கள். வேண்டும் என்றே இந்த திட்டத்தை குறை சொல்வதற்காக சொல்கிறார்கள். பொது வினியோக திட்டத்தை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னோடியாக உள்ளது. புதிய வேளாண்மை திட்டத்தால் மாநில உரிமைகள் பறிபோகும் என்ற யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது. பொது வினியோக திட்டம் தொடரும். எந்த பாதிப்பும் வராது.

இவ்வாறு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Next Story