ராம கோபாலன் மறைவு: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்


ராம கோபாலன் மறைவு: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 1 Oct 2020 1:45 AM GMT (Updated: 2020-10-01T07:15:12+05:30)

ராம கோபாலன் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம கோபாலன் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். ராம கோபாலன் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டதோடு, இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். ராம கோபாலனை இழந்து வாடும், அவரது இயக்க தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ராம கோபாலனின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் திரு.இராம கோபாலன் அவர்கள்  காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். திரு.இராம கோபாலன் அவர்களது பிரிவால்வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:- இந்து முன்னணி நிறுவனத்தலைவர், பெரியவர் ராம கோபாலன் உடல்நல குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச்செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். தி.மு.க.வின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சிந்தாந்த வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும், கருணாநிதியும், ராம கோபாலனும் நல்ல நண்பர்களே. அவர்களிடையே இருந்த பரஸ்பர நன்மதிப்பு, ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறிக்கொள்ளும் கண்ணியம், பண்பாடு மற்றும் பக்குவம் நிறைந்த நட்புணர்வு ஆகியவற்றை நான் அறிவேன்.

இருவரும் நேரில் சந்தித்து அளவளாவிய நேரங்களில் கூட தத்தம் கொள்கைகளில் இருவருமே உறுதியாக இருந்தவர்கள். அந்த “கொள்கைச் சுதந்திரம்” இருவரின் நட்புணர்வில் என்றைக்குமே குறுக்கிட்டதில்லை. ஆழ்ந்த ஆன்மிக சிந்தனையுடன், சமய கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியான அவரது மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- ராம கோபாலன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்து மதம் மீதும், அதன் நம்பிக்கைகள் மீதும் பற்று கொண்ட ராம கோபாலன் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அவற்றை பரப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மத மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். அவர் கொண்ட கொள்கைகளில் சமரசமின்றி செயல்பட்டு வந்தவர். ஆன்மிகவாதி ராம கோபாலனை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள், இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். கொள்கையில் நேர் எதிர்நிலையில் இருந்தாலும் மனிதநேய அடிப்படையில் சந்திக்கும்போதெல்லாம் அன்புடன் நலம் விசாரித்துக்கொள்ளும் பண்பு எங்கள் இருவரிடமும் உண்டு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அவருடைய அமைப்பினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்:- மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரும், இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவருமான வீரத்துறவி ராம கோபாலன் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியையும், சோகத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தனது வாழ்வை இந்துக்கள் நலனுக்காகவே அர்ப்பணித்தவர். இந்துக்கள் நலனுக்காக இந்து முன்னணி என்ற அமைப்பை நிறுவி தனது இறுதி மூச்சு வரை அயராது பாடுபட்டவர். ராம கோபாலானின் இழப்பு தமிழகத்திற்கும், இந்து உணர்வாளர்களுக்கும், பக்தர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

இந்து முன்னணி தொண்டர்களுக்கும், ராம கோபாலனின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக பா.ஜ.க.வின் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் நிறுவனர் எஸ்.வேதாந்தம், பொதுச்செயலாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ராம கோபாலன் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி மூலமாக பக்தியை பரப்பினார். அதன் மூலம் இந்து ஒற்றுமை, எழுச்சியை ஏற்படுத்தினார். பசுவதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம், இந்து கோவில் சொத்துக்களை மீட்க போராட்டங்கள், ராமர் பாலம் பாதுகாக்க கையெழுத்து இயக்கம் நடத்தி, இந்துக்களின் உரிமைகளை பாதுகாத்தவர். இந்து சமுதாய பணிக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த ‘வீரத்துறவி’, ‘தமிழகத்தின் பாலகங்காதர திலகர்’ தனது 94 வயதில் அமரரானார். இந்து சமுதாயத்துக்காக அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பார கோடிக்கணக்கான இந்துக்கள் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், டாக்டர் எம்.கே.பிரசாத் எம்.பி., சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story