152-வது பிறந்தநாள்: மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர் மலர்தூவி மரியாதை; எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு


152-வது பிறந்தநாள்:  மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர் மலர்தூவி மரியாதை; எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Oct 2020 12:07 AM GMT (Updated: 3 Oct 2020 12:07 AM GMT)

காந்தியின் 152-வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவருடைய சிலைக்கு அருகில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

சென்னை,

காந்தியின் 152-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகில் அமைந்துள்ள காந்தி சிலை பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த அவருடைய உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

தொடர்ச்சியாக அமைச்சர் கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, டி.ஜெயக்குமார், காமராஜ், டாக்டர் சி.விஜயபாஸ்கர், பென்ஜமின், தமிழக அரசின் தலைமை செயலாளர் க.சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டு காந்தியின் உருவப்படத்துக்கு மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்வை தொடர்ந்து காந்தி சிலைக்கு அருகில் காந்தி சர்வோதயா அமைப்புகள் சார்பில் காந்தி பிரார்த்தனை பாடல்கள் பாடப்பட்டன. காந்தி கதர் ராட்டினம் சுற்றியதுபோல், காந்தி நெறியாளர்கள் கதர் ராட்டினத்தை அமர்ந்து சுற்றினர். அதை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

அதன்பின்னர், பா.ம.க. சார்பில் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் தலைமையில் நிர்வாகிகளும், ஆம் ஆத்மி கட்சி மாநில பொதுச்செயலாளர் ஜோசப்ராஜா, மகளிரணி தலைவர் ஸ்டெல்லா உள்பட நிர்வாகிகளும், தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை சார்பில் நிர்வாகிகளும், தமிழ் புரட்சி களம் நிறுவனத்தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.எம்.மாரீஸ்வரன் உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

இதேபோல், சென்னை கிண்டி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நிர்வாகிகள் ஜி.ராபர்ட், மணலிகுமார், ஆர்.ஆர்.கண்ணன், வி.பி.அய்யர், நாகராஜன் உள்பட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, அ.ம.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் ஜி.செந்தமிழன் தலைமையில் சுகுமார்பாபு, சந்தானகிருஷ்ணன், வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் சவுந்தரராஜன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை பொதுச்செயலாளர் கே.சி.ராஜா உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story