மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு செல்லும் -சென்னை ஐகோர்ட்


மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய  வேண்டும் என்ற உத்தரவு செல்லும் -சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 6 Oct 2020 9:31 AM GMT (Updated: 6 Oct 2020 9:31 AM GMT)

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை: 

மருத்துவ மேற்படிப்புகளைப் படிக்கும் மாணவ, மாணவிகள் 2 ஆண்டுகள்  அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர்,  படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம்  பணியாற்ற வேண்டும் என நிபந்தனை உள்ளது.

இரண்டு ஆண்டுகள் பணி முடித்தால் மட்டுமே அவர்களது சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து,சென்னை ஐகோர்ட்டில் 276  மருத்துவ மாணவ, மாணவிகள்  வழக்கு தொடர்ந்திருந்தனர். அகில இந்திய மருத்துவ படிப்பு கொள்கை விளக்க குறிப்பேட்டில் இதுபோன்ற எந்தவொரு நிபந்தனையும் இல்லை எனவும், இது சட்டவிரோதமானது என மருத்துவ மாணவர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களில் தெரிவித்திருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவ மாணவிகள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவர்களின் சான்றிதழ்களை திரும்ப வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய  அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

மேலும், தமிழகத்தில் உள்ள  மருத்துவ கல்லூரிகளில்  மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள்,  2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை செல்லும். இரண்டு ஆண்டுகள் பணி முடித்த பின்னரே, அவர்களது சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரியானது தான் என தீர்ப்பளித்துள்ளனர்.

 அதேவேளை, இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு பணி வழங்க முடியாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாணவ மாணவியரின்  சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்."


Next Story