அ.தி.மு.க.வில் வழிகாட்டு குழு அமைப்பது குறித்து நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை


அ.தி.மு.க.வில் வழிகாட்டு குழு அமைப்பது குறித்து நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 6 Oct 2020 7:26 PM GMT (Updated: 6 Oct 2020 7:26 PM GMT)

அ.தி.மு.க.வில் வழிகாட்டு குழு அமைப்பது குறித்து நேற்று நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நீடித்தது.

சென்னை,

அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டாலும், வழிகாட்டு குழுவை அமைப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே இருவேறு கருத்து நிலவி வருகிறது. வழிகாட்டு குழுவில் யார் - யாரை உறுப்பினராக நியமிப்பது என்பது குறித்து நேற்று மாலையும் பேச்சு வார்த்தை தொடர்ந்தது. இந்த பேச்சு வார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது.

நேற்று மாலை, முதலில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், சி.வி.சண்முகம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். அதேபோல், எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கே.பி.அன்பழகன், வெல்லமண்டி நடராஜன், கே.சி.கருப்பணன், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். இருதரப்பு ஆலோசனைகளும் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

அதன்பின்னர், இரவு 7.45 மணியளவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இருந்து கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், சி.வி.சண்முகம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்றனர். அங்கு இருந்த அமைச்சர்கள் குழுவுடன் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சுமார் ¾ மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது.

அதன்பின்னர், இரவு 8.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்த அமைச்சர்கள் குழுவினர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர். இடையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அங்கிருந்து வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர், இரவு 10.20 மணிக்கு மீண்டும் அங்கு வந்தார். இதற்கிடையே புகழேந்தி இரவு 9.58 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்தார்.  இவ்வாறு நள்ளிரவு வரை இருதரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

Next Story