பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு 2 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரிப்பு
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்துள்ளது.
சென்னை,
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட ஒப்பந்தத்தின்படி கடந்த மாதம் 18-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 21-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. ஆரம்பத்தில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் அது 2 ஆயிரத்து 100 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 660 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்கலாம். 989 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த மாதம் 21-ந் தேதி ஏரியின் நீர்மட்டம் 17 அடியாக பதிவானது. வெறும் 105 மில்லியன் கன அடி தண்ணீர் தான் இருப்பு இருந்தது.
நேற்று காலை ஏரியின் நீர்மட்டம் 26 அடியாக உயர்ந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணா தண்ணீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கடந்த 15 நாட்களில் 9 அடி உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story