இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை அறிவிப்பு


இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 11:53 AM IST (Updated: 7 Oct 2020 11:53 AM IST)
t-max-icont-min-icon

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வி கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை, 

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் இடங்கள் தனியார் பள்ளிகளில் இருக்கின்றன. அதற்கு விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட மாணவர் சேர்க்கையும் முடிவடைந்துவிட்டது. அவற்றில் மீதமுள்ள இடங்களில் சேருவதற்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

குழந்தைகளின் பெற்றோர் வருகிற 12-ந்தேதி முதல் அடுத்த மாதம்(நவம்பர்) 7-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 11-ந்தேதி மாலை 5 மணிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள்?, தகுதியான விண்ணப்பதாரர்கள் யார்? என்பது குறித்த அறிவிப்பை அந்தந்த பள்ளி நிர்வாகம் அறிவிப்பு பலகையிலும், கல்வித்துறை இணையதளத்திலும் தெரிவித்து இருக்க வேண்டும். 

அதன்பின்னர், அடுத்த மாதம் 12-ந்தேதி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களையும் மேற்சொன்னபடி வெளியிட வேண்டும். மாணவர் சேர்க்கை நடத்தி முடித்த பிறகு சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரியிடம் அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story