கொரோனா பரவல் குறையாததால் சத்துணவு ஊழியர்கள் தேர்வு ரத்து தமிழக அரசு அறிவிப்பு


கொரோனா பரவல் குறையாததால் சத்துணவு ஊழியர்கள் தேர்வு ரத்து தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 12:13 AM GMT (Updated: 9 Oct 2020 12:13 AM GMT)

கொரோனா பரவல் இன்னமும் குறையாததால் சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணிக்கான ஊழியர்கள் தேர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 10-ம் வகுப்பும், சமையல் உதவியாளர் பணிக்கு 5-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறைந்த கல்வித்தகுதியில் அரசு வேலை கிடைப்பதால், ஏராளமானவர்கள் தங்களது விண்ணப்பங்களை வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கொடுத்து வந்தனர். இதனால் பல இடங்களில் கொரோனா சமூக இடைவெளியை மறந்து கூட்டம் அதிகரித்தது. விண்ணப்பங்கள் பெறப்பட்டதையடுத்து நேர்காணல் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.

இதற்கிடையே சத்துணவு அமைப்பாளர் பணிக்கான தேர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு நேற்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வு பணிகள் நடைபெற உள்ளன.

இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால் நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story