அரசு பாதுகாப்பு விதிகள் மீறல்; நிறுவனங்கள், ஓட்டல்கள், தனிநபர்களிடம் இருந்து ரூ.2½ கோடி அபராதம் வசூல்
தமிழக அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், ஓட்டல்கள், தனிநபர்களிடம் இருந்து ரூ.2.52 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர், தொழில், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், அங்காடிகள் இயங்க பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார். தளர்வுகளுடன் இயங்கும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டு தளங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அவ்வப்போது அரசு அறிவித்து வருகிறது.
தற்போது பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகள் மற்றும் பணி நிமித்தம் காரணமாக அதிகளவில் வெளியே வருகின்றனர். பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் வேப்பேரி சாலைக்குட்பட்ட பகுதிகளில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல், முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுவரை ராயபுரம் மண்டலத்தில் ரூ.44.21 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் சென்னை மாநகராட்சியில் ரூ.3.80 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இதுவரை சென்னை மாநகராட்சியில் நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2.52 கோடி அபராதம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story