கடலூர் ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த அவலம்; ஊராட்சி செயலாளர் சஸ்பெண்டு


கடலூர் ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த அவலம்; ஊராட்சி செயலாளர் சஸ்பெண்டு
x
தினத்தந்தி 10 Oct 2020 10:45 AM IST (Updated: 10 Oct 2020 10:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த சம்பவத்தில் ஊராட்சி செயலாளரை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடந்த ஜூலை 17ந்தேதி ஊராட்சிமன்ற கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர், ஊராட்சி துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இதன்பின்னர் கூட்டம் நடைபெற்றபொழுது, தெற்கு திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டு உள்ளார்.  அவர் ஆதிதிராவிடர் சமூகத்தினை சேர்ந்தவர் என்பதனால் அவமதிக்கப்பட்டு உள்ளார் என புகார் எழுந்துள்ளது.

ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தவிர ஊராட்சி துணை தலைவர், கவுன்சிலர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.  இந்நிலையில், ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  ஊராட்சி செயலர் சிந்துஜா மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் வெளியான நிலையில், தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Next Story