ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம் - ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது


ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம் - ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது
x
தினத்தந்தி 10 Oct 2020 6:02 PM IST (Updated: 10 Oct 2020 6:02 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரத்தில், ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த ஊராட்சியில் துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த ஜூலை 17ந் தேதி ஊராட்சிமன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர், ஊராட்சி துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டு உள்ளார். அவர் ஆதிதிராவிடர் சமூகத்தினை சேர்ந்தவர் என்பதனால் அவமதிக்கப்பட்டு உள்ளார் என புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சிந்துஜாவை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிந்துஜா தற்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story