தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி 13, 14-ந் தேதிகளில் ஆய்வு
தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 13, 14-ந் தேதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது, புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். மேலும், கொரோனா காலத்தில் தொழில்துறையும் நலிந்துபோய் உள்ள நிலையில், தொழில் அதிபர்களையும், மகளிர் சுயஉதவிக் குழுவினரையும் அவர் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மாதம் 23-ந் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், அன்றைய தினம் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள இருந்ததால், இந்த 3 மாவட்ட சுற்றுப் பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம்
இந்த 3 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். வரும் 13-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் காலை 8.30 மணிக்கு வருகிறார். அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், முடிக்கப்பட்ட திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
அதன்பிறகு, அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளோடு கொரோனா தடுப்பு நடவடிக்கை, மேம்பாட்டு திட்டம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அதன்பின்னர், சிறு, குறு நடுத்தர தொழிலதிபர்கள், விவசாயிகள், மீனவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினரை தனித்தனியாக சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, பத்திரிகையாளர்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேட்டி அளிக்கிறார்.
சென்னை திரும்புகிறார்
அதன்பின்னர், தூத்துக்குடியில் இருந்து இரவு கன்னியாகுமரி செல்லும் அவர் அங்கு தங்குகிறார். பின்னர், 14-ந்தேதி (புதன்கிழமை) நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிக்கப்பட்ட திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
அன்று மாலை விருதுநகர் வரும் அவர், அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்கிறார். அமைச்சர்கள், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், அன்று இரவே மதுரை வந்து, அங்கிருந்து விமானம் மூலம் அவர் சென்னை திரும்புகிறார்.
Related Tags :
Next Story