3 திருமணங்களை மறைத்து 4-வது திருமணம் செய்த போலீஸ்காரர் மகன் கைது


3 திருமணங்களை மறைத்து 4-வது திருமணம் செய்த போலீஸ்காரர் மகன் கைது
x
தினத்தந்தி 11 Oct 2020 5:30 AM IST (Updated: 11 Oct 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே, 3 திருமணங்களை மறைத்து 4-வது திருமணம் செய்த போலீஸ்காரரின் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லால்குடி,

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பாலாஜி நகரை சேர்ந்த போலீஸ்காரர் மகாலிங்கம். இவருடைய மகன் கார்த்திக் (வயது 26). தனியார் எலக்ட்ரானிக்ஸ் கடையில் மேலாளராக பணிபுரியும் இவருக்கும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த சிவகுமாரின் மகள் சுமதிக்கும்(20) கடந்த ஆண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் இருவரும் திருவெறும்பூர் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து சுமதி கர்ப்பமானார். ஆனால் கர்ப்பத்தை கலைக்கும்படி கார்த்திக் கூறியுள்ளார். மேலும் சுமதியின் நகைகளை கார்த்திக் அடமானம் வைத்து ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கணவர்மீது சந்தேகம் அடைந்த சுமதி, அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது, அதில் அவர் சில பெண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்துள்ளன. அதுபற்றி கார்த்திக்கிடம் விசாரித்தபோது, அவர் கூறிய தகவலை கேட்டு சுமதி அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருச்சியை சேர்ந்த ஸ்டெல்லா என்ற பெண்ணை கார்த்திக் முதல் திருமணம் செய்துள்ளதும், பின்னர் சென்னையை சேர்ந்த வாணி என்ற பெண்ணை 2-வதாகவும், அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற பெண்ணை 3-வதாகவும் திருமணம் செய்ததாகவும், இதை அனைத்தையும் மறைத்து 4-வதாக சுமதியை திருமணம் செய்ததாக தெரிவித்தார்.

மேலும், முதல் மனைவி ஸ்டெல்லாவிற்கு 3 வயது மகனும், 2-வது மனைவி வாணிக்கு 1½ வயது பெண் குழந்தையும் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த சுமதி தனது தந்தை மூலம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லால்குடி போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். விசாரணையில், 3 பெண்களை திருமணம் செய்ததை மறைத்து சுமதியை 4-வது திருமணம் செய்ததை கார்த்திக் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story