ஊரடங்கு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக குறைவு


ஊரடங்கு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக குறைவு
x
தினத்தந்தி 11 Oct 2020 2:45 PM IST (Updated: 11 Oct 2020 2:45 PM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது

சென்னை

தமிழகத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது தேசிய நோய் தடுப்பு மைய தரவுகளின் படி தெரியவந்துள்ளது. லேசான பாதிப்பு உணர்ந்ததும் மருத்துவரை அணுகுதல், கூடுதல் விழிப்புணர்வு, சுத்தத்தை பேணுதல் ஆகிய நடவடிக்கைகளால் டைபாய்டு பாதிப்பு குறைய உதவியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல்  ஆகிய மாவட்டங்களில் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், நிகழாண்டு முன் குறிப்பிட்ட அனைத்து மாவட்டங்களிலும் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. 

இது குறித்து,  மாநில பொது சுகாதார நிபுணர் மருத்துவர் கே குழந்தைசாமி கூறுகையில், “  கைகளை கழுவுதல் உள்பட சுகாதார நலம் பேணும் பிற விஷயங்கள்  ஊக்கப்படுத்தப்பட்டதால்,  நீர் மூலம் பரவும் நோய்கள் குறைந்துள்ளன. டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் பொது கழிவறைகளை பயன்படுத்துகையில் அதிக அளவு பரவும். ஊரடங்கு காரணமாக டைபாய்டு மட்டும் அல்ல. பேதி உள்ளிட்ட நோய்களும் குறைந்த அளவே பதிவாகியுள்ளன” என்றார். 

டைபாய்டு பரவுவது எப்படி?

டைபாய்டு காய்ச்சல் பாக்டீரியாத் தொற்றினால் வரக்கூடியது. அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவை முக்கிய அறிகுறிகள். சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீயாதான் டைபாய்டு வரக்காரணம். சுத்தமற்ற உணவு மற்றும் குடிநீரினால் பரவக்கூடியது. கைகழுவாமல் சாப்பிடுவதும் இதற்கு முக்கியக் காரணம். இது நாமே நம் கைகளால் பாக்டீரியாவை எடுத்து உடலுக்குள் செலுத்துவது போன்றது.

ஆண்டுதோறும் உலகளவில் சுமார் 21.5 லட்சம் பேர் டைபாய்டால் பாதிக்கப்படுகிறார்கள் என அறிக்கைகள் கூறுகின்றன. டைபாய்டை கண்டறிந்து ஆரம்பத்திலேயே சிகிச்சை கொடுத்துவிட்டால் எளிதில் குணமடையலாம். இல்லாவிட்டால் மிகவும் மோசமாகி அடுத்ததடுத்த நிலைக்குக் கொண்டுசென்று உயிரையே எடுத்துவிடும்.

அசுத்தமான முறையில் உணவு உட்கொள்ளும்பொழுது உள்ளே செல்லும் சால்மோனெல்லா பாக்டீரியாவானது முதலில் சிறுகுடல் உள்ளே சென்று தற்காலிகமாக ரத்தத்தில் கலக்கிறது. கல்லீரல், மண்ணீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களால் உடல் முழுவதும் பரவுகிறது. அப்போதுதான் உடலில் காய்ச்சல் அறிகுறிகள் தென்படும். மேலும் பாக்டீரியா பித்தப்பை, பித்த உறுப்புகள் மற்றும் குடலின் நிணநீர் திசுக்களில் படையெடுத்து எண்ணிக்கையில் பெருகி, உடல் முழுவதும் பயங்கரத் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை உறுதிசெய்ய ரத்தம் அல்லது சிறுநீர் மாதிரிகளை எடுத்து சோதனை செய்யலாம்.


Next Story