அந்தமான் அருகே 9-ந்தேதி உருவான தாழ்வு பகுதி: காக்கிநாடா அருகே இன்று கரையை கடக்கிறது வானிலை ஆய்வு மையம் தகவல்
அந்தமான் அருகே கடந்த 9-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) கரையை கடக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதுதவிர கடந்த 9-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 9-ந்தேதி பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
கடந்த 10-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நேற்று அது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று இருக்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக கடலூர், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், காஞ்சீபுரம், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளிலும், கேரளா, கர்நாடகா கடல் பகுதிகளிலும் மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதவிர, 14-ந்தேதி (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில், தற்போது அது தள்ளிப்போவதாக கூறப்பட்டு இருக்கிறது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘மாமல்லபுரம், பெரியார், திருக்கழுக்குன்றத்தில் தலா 3 செ.மீ., சின்னக்கல்லாறு, காஞ்சீபுரம், உத்திரமேரூர், சோளிங்கர் தலா 2 செ.மீ., சோலையாறு, செங்கல்பட்டு, வால்பாறை, சீர்காழி, காவேரிப்பாக்கம், ஜிபஜார், மதுராந்தகம், பொன்னை அணை, வாலாஜா பாத், பொள்ளாச்சியில் தலா 1 செ.மீ.’ மழை பெய்துள்ளது.
Related Tags :
Next Story