சட்டசபைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம்; ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு


சட்டசபைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம்; ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 13 Oct 2020 1:57 PM IST (Updated: 13 Oct 2020 1:57 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன என்று குற்றம் சாட்டி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டசபைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர்.

இந்த செயல் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை உரிமை மீறல் குழுவுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதன்படி அவர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. தமிழக அரசு குறுக்கு வழியில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க குட்கா விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்த நோட்டீசை அனுப்பி உள்ளதாகவும், இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணையின்போது, தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டனர். கு.க.செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், உரிமை மீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீசில், அடிப்படை தவறுகள் உள்ளன.

இந்த நோட்டீசின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதன்பின்னரும், மனுதாரர்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாக கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம். இந்த ஐகோர்ட்டில் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 7ந்தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு தி.மு.க., எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. அதில் செப்டம்பர் 14ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ‘சட்டசபை கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பங்கேற்க விடாமல் தடுக்கவே உரிமை மீறல்குழு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாக கையாண்ட விவகாரத்தை சட்டசபையில் தி.மு.க. எழுப்புவதை தவிர்க்க திட்டமிட்டே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், உரிமை மீறல் குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  இந்த தடையை எதிர்த்து சட்டப்பேரவை செயலாளர், உரிமைக்குழு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு மீது இன்று நடந்த விசாரணையில், இடைக்கால தடையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.  அதனுடன், இந்த வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 வாரத்தில் பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Next Story