அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டம் எப்போது இயற்றப்பட்டது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி


அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டம் எப்போது இயற்றப்பட்டது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
x
தினத்தந்தி 14 Oct 2020 12:51 PM IST (Updated: 14 Oct 2020 12:51 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க, ஆளுநரின் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு அண்மையில் நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்வின் முடிவுகள் வரும் 16ம் தேதி வெளியாகும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்தது. தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், அதன் முடிவுகளும் 16ம் தேதியே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தேர்வின் முடிகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கிருபாகரன், நீதிபதி புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, வழக்கறிஞர் பிரசன்ன ராஜன் இந்த முறையீட்டைச் செய்தார்.

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது.

இதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டம் எப்போது இயற்றப்பட்டது? என்று கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக ஆளுநரின் செயலர் இன்று பிற்பகலில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

Next Story