அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கார் வாங்க கோவில் நிதியை பயன்படுத்துவது ஏன்? - ஐகோர்ட்டு கேள்வி
அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கார் வாங்க கோவில் நிதியை பயன்படுத்துவது ஏன்?, அரசு நிதியை பயன்படுத்தினால் என்ன? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வருமானம் குறைவாக உள்ள கிராம கோவில்களை சீரமைக்க, அதிக வருமானம் வரும பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து நிதி ஒதுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த நிதியை பயன்படுத்த இடைகால தடை விதித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “கோவில் நிதியை பயன்படுத்தி அதிகாரிகளுக்கு கார் வாங்கப்படுகிறது. தமிழகத்தில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை. உபரி நிதி ஒதுக்குவதற்கான கோவில்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. கடந்த 3 மாதங்களில் பல கோவில் சொத்துகள் விற்கப்பட்டுள்ளது” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வாதிடப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “அதிகாரிகளுக்கு கார் வாங்க கோவில் நிதியை ஏன் பயன்படுத்தப்படுகிறது?. அரசு நிதியை பயன்படுத்தினால் என்ன?” என்று கேள்வி எழுப்பி, “சிவன் சொத்து குலம் நாசம்” என்ற ஒரு பழமொழியையும் சுட்டிக்காட்டினர். பின்னர், “சட்டங்கள், விதிகள் இருந்தாலும், அவை முறையாக அமல்படுத்தப்படுவது இல்லை. தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்று இதுவரை கணக்கிடப்பட்டுள்ளதா? கோவில் சொத்துகள் யார் பெயரில் உள்ளன என்று தெரியுமா?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதை தொடர்ந்து, “இந்த வழக்கை வருகிற டிசம்பர் 1-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இந்த வழக்குகளுக்கு தாக்கல் செய்யப்படும் பதில் மனுக்களில் உள்ள விவரங்கள் திருப்தி அளிக்கவில்லை என்றால், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் ஆகியோர் ஒவ்வொரு விசாரணையின் போதும் ஆஜராக வேண்டியது வரும்” என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், கோவில்களின் உபரி நிதியை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தர தடையாக மாற்றி உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story