அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை நீக்க கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்


அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை நீக்க கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2020 11:54 AM IST (Updated: 15 Oct 2020 11:54 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை நீக்க கோரி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்டுக்கு ரூ.314 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,570 கோடி நிதியை அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ஆதாரங்களால் திரட்ட முடியும் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக சூரப்பா இந்த கடிதத்தை எழுதியுள்ளதாகவும், இதனால் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படும் எனவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன.

இதனை தொடர்ந்து தன்னிச்சையாக கடிதம் எழுதிய சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பாக இன்று திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு, உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அப்பல்கலைக்கழகம் மாநில கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Next Story