அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்
அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை,
சென்னையை சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், விவசாயிகளைக் காக்க தமிழகம் முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கவும், விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்,
இரவு பகல் பாராமல் விவசாயம் செய்து பிறருக்கு உணவூட்டும் விவசாயிகள், தங்களது உற்பத்திப் பொருட்களை சரியான நேரத்தில் விற்பனை செய்ய இயலாமல், வறுமையில் சிக்கி, தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, அரசு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, உரிய கவனம் செலுத்த வேண்டும்.
உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் ஒருபக்கம் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகும் சூழலில், மறுபுறம், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சமாக அரசு அதிகாரிகள் பெறுவது வேதனையானது. அரசு அதிகாரிகள் தங்களின் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமமானது என்று கூறினர்.
மேலும், தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன? விவசாயிகள் கொள்முதல் செய்வதற்காக கொள்முதக் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகள் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? என அடுத்தடுத்து கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இதுதொடர்பாக நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் நாளை உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story