மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலினுடன் ஜப்பான் நாட்டு துணை தூதர் சந்திப்பு + "||" + Deputy Ambassador of Japan meets with MK Stalin

மு.க.ஸ்டாலினுடன் ஜப்பான் நாட்டு துணை தூதர் சந்திப்பு

மு.க.ஸ்டாலினுடன் ஜப்பான் நாட்டு துணை தூதர் சந்திப்பு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஜப்பான் நாட்டு துணை தூதர் சந்தித்து பேசினார்.
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஜப்பான் நாட்டு துணை தூதர் மசாயுகி டாகா சந்தித்து பேசினார்.

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், தமிழகத்தில் செயல்படும் ஜப்பான் நாட்டு துணைத் தூதரகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட துணைத் தூதர் மசாயுகி டாகா, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இதேபோல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த உடன்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளரும், உடன்குடி ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்பு செயலாளருமான செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவருமான கே.பாலமுருகன் தி.மு.க.வில் இணைந்தார்.

அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் சிவசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் பி.பொன்னுதுரை தி.மு.க.வில் இணைந்ததோடு, ஈரோடு மண்டலத்தில் உள்ள ஒரு லட்சம் உறுப்பினர்களை கொண்ட தனது கட்சியையும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்து கொண்டார். அப்போது, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதேபோல், லோக் ஜன் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் டாக்டர் எம்.மதிவாணன், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அப்போது, தர்மபுரி மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.