2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு!
2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யபட்டார்.
சென்னை
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியா என்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக, அக்கட்சியின் தலைவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
"மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் இன்று நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
நடைபெற இருக்கும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தனித்துப் போட்டியிடுவது அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது, வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் வெற்றிக்கான வியூகம் அமைப்பது, தேர்தல் பணிக்குழுக்கள் அமைப்பது, கன்னியாகுமரி மக்களவை தொகுதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனுக்கே அளிக்கப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தலைவர் கமல்ஹாசன் உருவாக்கிய 'நாமே தீர்வு' இயக்கத்திற்குப் பங்களித்தவர்கள், களப்பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த இயக்கம் கரோனாவோடு மட்டும் முற்றுப்பெறுவதில்லை. தொடர்ந்து மக்கள் சேவைக்காகவும், பொதுப் பிரச்சினைகளுக்காகவும் களத்தில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கட்சியின் உள்கட்டமைப்பு வலுப்பெற்று வருவதையும், கட்சியில் புதிய உறுப்பினர்கள் பெருமளவில் இணைந்து வருவதையும், இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் நீதி மய்யம் வலுப்பெற்று வருவதையும் ஊடகங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருவதைக் குறிப்பிட்ட தலைவர் கமல்ஹாசன், தங்களது தொகுதிகளில் தேர்தல் பணிகளை இப்போதே ஆரம்பித்துவிட்ட நிர்வாகிகளைப் பாராட்டினார். அனைவரும் ஒருமித்து தேர்தல் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு களப்பணியாற்றி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கிராம சபை கூட்டங்களைத் தொடர்ந்து ரத்து செய்து, உள்ளாட்சி உரிமைகளை முடக்கி ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கும் ஆளும் கட்சியின் சர்வாதிகாரப் போக்கினை கண்டித்து தீர்மானம் இயற்றப்பட்டது.
உள்ளாட்சி உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, தமிழக அரசால் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வரும் கிராம சபை கூட்டத்தை விரைந்து நடத்திட வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக வழக்கு தொடுக்க வைத்து , மக்களின் உரிமைக்கு என்றும் துணை நிற்கும் தலைவர் கமல்ஹாசனுக்கு கட்சியின் சார்பாக பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story