அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் - ரா.முத்தரசன் கருத்து


அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் - ரா.முத்தரசன் கருத்து
x
தினத்தந்தி 17 Oct 2020 8:06 AM IST (Updated: 17 Oct 2020 8:06 AM IST)
t-max-icont-min-icon

மாநில அரசை கலந்தாலோசிக்காமல் செயல்படும் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிவகங்கையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், நடப்பு ஆண்டில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு இழைக்கும் மன்னிக்க முடியாத துரோகம்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆனால் அவரிடமிருந்து எந்த பதலும் இல்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, பிரதமரை சந்தித்து உள் ஒதுக்கீடு மசோதாவை செயல்படுத்த வேண்டும்.

அமைச்சரவை நிறைவேற்றும் எந்த தீர்மானத்தையும் ஆளுநர் ஏற்பதில்லை. இது தமிழக அரசை அவமதிக்கும் செயல். அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா சூரத்தனமாக தன்னிச்சையாக செயல்படுகிறார். மாநில அரசை கலந்தாலோசிக்காமல் செயல்படும் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் பழனிசாமி ஆட்சியா? சூரப்பா ஆட்சியா? என்ற கேள்வி எழுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Next Story