மேலும் 9 மாநிலங்களில் ‘கேலோ’ இந்தியா சிறப்பு மையம்-இந்த பட்டியலிலும் தமிழகம் இடம் பெறவில்லை


மேலும் 9 மாநிலங்களில் ‘கேலோ’ இந்தியா சிறப்பு மையம்-இந்த பட்டியலிலும் தமிழகம் இடம் பெறவில்லை
x
தினத்தந்தி 18 Oct 2020 3:16 AM IST (Updated: 18 Oct 2020 3:16 AM IST)
t-max-icont-min-icon

2 யூனியன் பிரதேசங்கள் உள்பட மேலும் 9 மாநிலங்களில் ‘கேலோ’ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜு தெரிவித்து உள்ளார். இந்த பட்டியலிலும் தமிழகம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

2 யூனியன் பிரதேசங்கள் உள்பட மேலும் 9 மாநிலங்களில் ‘கேலோ’ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜு தெரிவித்து உள்ளார். இந்த பட்டியலிலும் தமிழகம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டில் திறமை உள்ள வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து பயிற்சி அளிப்பதற்காக ‘கேலோ’ இந்தியா என்ற திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரு வலுவான விளையாட்டுச்சூழல் அமைப்பை உருவாக்கும் முயற்சியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்களை (கே.ஐ.எஸ்.சி.இ.) உருவாக்க இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

 மாநிலங்களில் ஏற்கனவே உள்ள விளையாட்டு பயிற்சி மையங்களை, கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்களாக உலகத்தரத்தில் மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.மேம்படுத்தப்படும் இந்த மையத்துக்கு நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் உதவி புரிவதற்கான ஊழியர்களை கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசே நியமிக்கும். அதைப்போல விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்கும். வீரர்களுக்கான உணவு, உறைவிட பராமரிப்புகளை மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த திட்டத்தின்படி முதல் கட்டமாக கேரளா, கர்நாடகம், ஒடிசா, தெலுங்கானா, மணிப்பூர், அருணாசல பிரதேசம், மிசோரம், நாகலாந்து ஆகிய 8 மாநிலங்களில் உள்ள விளையாட்டு பயிற்சி மையங்கள் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன. 2-வது கட்டமாக அசாம், மத்திய பிரதேசம், மேகாலயா, சிக்கிம், மராட்டியம் ஆகிய மாநிலங்களும், தாத்ரா நாகர்வேலி மற்றும் டாமன்டையு ஆகிய யூனியன் பிரதேசமும் தேர்வு செய்யப்பட்டன.

இந்த நிலையில் தற்போது 3-வது கட்டமாக 2 யூனியன் பிரதேசங்கள் உள்பட மேலும் 9 மாநிலங்களில் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜு தெரிவித்து உள்ளார்.

இந்த பட்டியலில் ஆந்திரா, சத்தீஷ்கார், சண்டிகர், கோவா, அரியானா, இமாச்சல பிரதேசம், திரிபுரா ஆகிய 7 மாநிலங்களும், புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்று உள்ளன. இத்துடன் சேர்த்து மொத்தம் 20 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 24 சிறப்பு மையங்கள் அமைய உள்ளன.

சிறப்பு மையங்கள் அமைப்பு பட்டியலில் பல்வேறு மாநிலங்கள் இடம்பெற்று உள்ளன. ஆனால் தமிழகம் இடம்பெறவில்லை. ஏற்கனவே, விளையாட்டு பயிற்சிக்கான போதிய இடம் இல்லாமல் ‘சாய் சப்சென்டர்’ திட்டம் தமிழகத்துக்கு கிடைக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story