15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2020 7:28 AM GMT (Updated: 18 Oct 2020 7:28 AM GMT)

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது.

இந்த நிலையில் இன்று தமிழகத்தின்  15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை,  திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல்,தேனி, திருவள்ளூர், வேலூர்,  ராணிப்பேட்டை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

19-ந் தேதி (நாளை) மத்திய வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும்.

இதனால் அந்தமான் கடல் பகுதியில் இன்றும், மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் நாளையும், மத்திய மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் நாளை மறுதினமும், ஆந்திர கடலோர பகுதிகளில் 21-ந் தேதியும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story