சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தருக்கு கொரோனா
சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற தமிழக பக்தருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சபரிமலை,
சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற தமிழக பக்தருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 16- ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இங்கு சாமி தரிசனம் செய்ய கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்களில் தினசரி 250 பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழுடன் வரும் அய்யப்ப பக்தர்களுக்கு நிலக்கல்லிலும் கொரோனா பரிசோதனை செய்து, 30 நிமிடத்தில் முடிவு வெளியிடப்படுகிறது. அதில் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பக்தர்கள் பம்பை வழியாக மலை ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சபரிமலையில் தரிசனத்திற்கு வந்த அய்யப்ப பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து வந்த பக்தர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மலையேறி செல்ல அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டார்.
தொடர்ந்து அதிகாரிகள் அவரை ரான்னியில் உள்ள கொரோனா முதல் நிலை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story