முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவு: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் ஆறுதல்


முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவு: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 19 Oct 2020 12:05 PM GMT (Updated: 19 Oct 2020 12:11 PM GMT)

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் ஆகிய ஊர்களுக்கான அரசுமுறை பயணத்தை ரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார்.

சிலுவம்பாளையத்தில் தனது தாயாரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றார். தொடர்ந்து காரிய நிகழ்வுகளிலும் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை முடித்துக்கொண்டு, நேற்று மாலை 6.05 மணிக்கு சிலுவம்பாளையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். இரவு 9.20 மணிக்கு அவர் சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்தார். முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Next Story