ஆந்திரா, கா்நாடகாவில் மழை எதிரொலி: வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு


ஆந்திரா, கா்நாடகாவில் மழை எதிரொலி: வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு
x
தினத்தந்தி 19 Oct 2020 7:22 PM GMT (Updated: 19 Oct 2020 7:22 PM GMT)

வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ பல்லாரி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தற்போது வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

குறிப்பாக கா்நாடகம், ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வெங்காயம் கொண்டு வரப்படுவது வழக்கம். அங்கும் மழை காரணமாக வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வரத்து மிகவும் குறைந்து விட்டது. இதனால் கடந்த சில நாள்களாக பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. 

இந்தநிலையில் நேற்றைய நிலவரப்படி சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மொத்த விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:-

கடந்த செப்டம்பா் மாதத் தொடக்கத்தில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை பெரிய வெங்காயம் ரூ.750 முதல் ரூ.1,100 வரை விற்பனையானது. இதனால் அப்போது மொத்த விலையில் பெரிய வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது வெளி மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரத்து வெகுவாக குறைந்து விட்டது. கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்களில் 700 முதல் 850 டன் அளவு வெங்காயம் மட்டுமே கொண்டுவரப்பட்டது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையில் அதன் விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக தீபாவளி நேரத்தில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கும். தற்போது 20 நாள்கள் முன்பாகவே அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்துக்கு பின்னரே வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.

அதேபோன்று நவம்பர் மாதத்தில் மராட்டிய மாநிலம் சோலாப்பூர், கர்நாடக மாநிலம் கதக், ஹூப்ளி ஆகிய இடங்களில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்கு வரும். அங்கும் மழை காரணமாக வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் போதுமான அளவு வெங்காயம் வரத்து இல்லை. ஐப்பசி மாதத்தில் திருமண நிகழ்ச்சிகள் அதிகம் இருப்பதால் வெங்காயத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் அதன் விலையும் இருமடங்கு உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story