முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் வகுப்பை டிசம்பர் 1-ந்தேதி தொடங்கலாம் - தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு
நவம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், முதலாம் ஆண்டு வகுப்புகள் டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தொடங்கலாம் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) தெரிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்வித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக என்ஜினீயரிங் படிப்புகளில் இன்னும் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படாமலேயே இருக்கின்றன.
இதுதொடர்பாக சமீபத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அறிவிப்பை வெளியிட்டது. அதில், அக்டோபர் 30-ந்தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்றும், நவம்பர் 1-ந்தேதி முதல் என்ஜினீயரிங் வகுப்புகள் தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த அட்டவணையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மாற்றத்தை கொண்டு வந்து அறிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் உறுப்பினர் செயலர் ராஜீவ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா தொற்று காரணமாக தற்போது இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும் ஐ.ஐ.டி.க்கள் மற்றும் என்.ஐ.டி.க்கள் உள்பட என்ஜினீயரிங் படிப்புகளில் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 1-ந்தேதி முதல் தொடங்கலாம்.
கொரோனா தொடர்பாக ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி வகுப்புகள் ஆன்லைன், ஆப்லைன் அல்லது இரண்டும் சேர்த்தோ நடத்தப்படலாம். சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி, அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப அட்டவணை மேலும் மாறக்கூடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story