ரேஷன் கடைகளில் விரல்ரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தம் - பொதுமக்கள் மகிழ்ச்சி
ரேஷன் கடைகளில் விரல்ரேகை பதிவு முறையில் உணவு பொருட்கள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதால் பழைய முறைப்படி உணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களும், கடை ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னை,
நாடு முழுவதும் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வாங்கும் வகையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் 2 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரத்து 864 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 34 ஆயிரத்து 773 ரேஷன் கடைகள் மூலம் பயோமெட்ரிக் முறை அதாவது கார்டு வைத்திருப்பவர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் ஏற்கனவே இருந்த ‘பாயின்ட் ஆப் சேல்’ எந்திரத்தை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக விரல் ரேகையை பதிவு செய்யும், பயோ மெட்ரிக் எனப்படும் எந்திரம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் சென்னையில் பல இடங்களில் விரல்ரேகை பதிவு செய்யும் எந்திரம் முறையாக வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் ரேஷனில் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக குடும்பத்தில் உள்ள ஒருவரின் விரல்ரேகை எந்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், வீட்டில் உள்ள உறுப்பினர் வேறு யாராவது ஒருவரை அழைத்து வாருங்கள் என்று கடை ஊழியர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்பினர். மேலும் இன்டர்நெட் இணைப்பு சரியாக இல்லாததால் ஒருவருக்கு பொருட்கள் வழங்க 15 முதல் 20 நிமிடம் வரை நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதன்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 15 முதல் 25 பேருக்கு மட்டுமே ரேஷனில் உணவு பொருட்கள் வழங்க முடிந்தது.
ஒரு நாள் முழுவதும் ரேஷன் கடையில் காத்திருந்துவிட்டு உணவு பொருட்கள் வாங்காமல் வெறும் கையோடு வீட்டுக்கு செல்லும் அவலநிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இதனால் நேரம் வீணாவதுடன், பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
பழைய முறைப்படி வினியோகம்
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன், அனைத்து கூட்டுறவு, மண்டல இணை பதிவாளர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
‘கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக யாருக்கும் பொருட்கள் வழங்காமல் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழிமுறைகளை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வழங்க கைவிரல் ரேகை (பயோமெட்ரிக்) அங்கீகாரம் முதல் நிலையாகும்.
அடுத்து ஸ்கேன் முறையில் வழங்கலாம். அது முடியாதபட்சத்தில், ஆதார் (ஓடிபி) முறை, ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யும் முறை, ரேஷன் அட்டைதாரரின் பதிவு செய்த செல்போனுக்கு ஓடிபி அனுப்பும் முறை, மின்னணு ரேஷன் அட்டையை (ஸ்மார்ட் கார்டு) ஸ்கேன் செய்யும் முறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும். புதிய எந்திரத்தில் விரைவாக பொருட்கள் வழங்க சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் அவர் கூறி உள்ளார்.
விரல்ரேகை பதிவு மூலம் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்கும் முறையை தற்காலிகமாக நிறுத்திவைக்க அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் கூட்டுறவு துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இதனை ஏற்று, சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் பழைய முறையான ரேஷன் அட்டையை (ஸ்மார்டு கார்டு) ‘பாயின்ட் ஆப் சேல்’ எந்திரத்தில் ஸ்கேன் செய்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், கடை ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story