கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சட்டவிரோதம் இல்லை - ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று ஐகோர்ட்டில் ரிசர்வ் வங்கி பதில் மனு தாக்கல் செய்து விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து ரிசர்வ் வங்கி சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடும் கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் இந்த சட்டம் அமலுக்கு வரவுள்ளது. கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்த ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது.
கூட்டுறவு சங்கங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமான சட்டங்கள் உள்ளதால், வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதால், இதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. மோசமான நிதி நிலை காரணமாக நாடு முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் 430 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு டிசம்பர் 4-ந்தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
Related Tags :
Next Story