விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்
விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை,
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ திரைப்படத்தில் நடிக்கக்கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தன. தன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிடுமாறு முத்தையா முரளிதரனே அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியும் அந்த திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி தனது மகளுடன் இருக்கும் படத்தை பதிவிட்டிருந்த டுவிட்டர் ஐ.டி.யில், அவரது மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த பக்கம் நீக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலை கண்டித்து கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதைச் செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story