சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேர்வாய் கண்டிகை-கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தில் மழைநீரை சேமிக்க ஏற்பாடு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவு
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை-கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தில் வடகிழக்கு பருவ மழை தண்ணீரை நிரப்பி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
சென்னை,
சென்னை மாநகரில் கடந்த 2013-ம் ஆண்டு 77 லட்சமாக இருந்த மக்கள் தொகை, 2014-ம் ஆண்டு 87 லட்சம், 2015-ம் ஆண்டு 90 லட்சம், 2016-ம் ஆண்டு 93 லட்சம், 2017-ம் ஆண்டு 98 லட்சம், 2018-ம் ஆண்டு 1 கோடியே 316, 2019-ம் ஆண்டு 1 கோடியே 6 ஆயிரத்து 392, நடப்பு ஆண்டு (2020) இதுவரை 1 கோடியே 9 லட்சத்து 71 ஆயிரத்து 108 என்ற அளவில் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இவர்கள் அனைவருக்குமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.
குறிப்பாக பருவமழை போதுமான அளவு பெய்யாதது, அதேநேரம் 2015-ம் ஆண்டு வரலாறு காணாத அளவில் பெய்த பருவ மழையால் கிடைத்த தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் கடலில் கலக்கும் நிலை இருந்தது. தொடர்ந்து வளர்ந்து வரும் சென்னை மாநகருக்கு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
பருவ மழை பொய்த்து போனால் இந்த 4 ஏரிகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் சென்னை மாநகருக்கு போதுமானதாக இருக்காது. எனவே, கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா 5-வது நீர்தேக்கத்தை அமைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தேர்வாய் கண்டிகை பெரிய ஏரியையும், அருகே உள்ள கண்ணங்கோட்டை ராஜன் ஏரியையும் இணைத்து கூடுதலாக அருகில் உள்ள நிலத்தை அதில் சேர்த்தும், 1,495.64 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.330 கோடி செலவில், ஆயிரம் மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கும் வகையில், புதிய நீர்த்தேக்கம் அமைக்க திட்டமிடப்பட்டது.
தொடர்ந்து 2013-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே ஜெயலலிதா அடிக்கல் நாட்டி, புதிய ஏரி அமைப்பதற்கான பணியையும் தொடங்கிவைத்தார். தற்போது பணிகள் நிறைவடைந்து தண்ணீர் சேமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. ஏற்கனவே உள்ள 4 நீர்த்தேக்கங்களில் 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி (11 டி.எம்.சி.) தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவு வசதி உள்ளது. போதிய மழை பெய்யாத நிலையில் இந்த அளவு நீர் போதுமானதாக இருக்காது. எனவே தான் கூடுதலாக நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படுகிறது.
கண்ணங்கோட்டை தேர்வாய் கண்டிகை பகுதியை தேர்வு செய்து 1,200 ஏக்கரில் புதிய ஏரி உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 1,100 ஏக்கர் பரப்பில் நீர் சேமிக்கும் பகுதியும், 140 ஏக்கர் புறம்போக்கு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணியும் முடிவடைந்து உள்ளது.
கடந்த ஆண்டு பணியை முடித்து, வடகிழக்கு பருவ மழை நீரை சேமிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தனியார் நிலங்கள் கையகப்படுத்துவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்து இறுதி கட்டமாக ஒரு சில பணிகள் மட்டும் நடந்து வருகிறது. அடுத்த 10 நாட்களில் பணிகள் நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் இதனை முறைப்படி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் திறந்து வைக்க உள்ளார். இதற்கிடையில் வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை மூலம் கிடைக்கும் தண்ணீரை புதிய ஏரியில் நிரப்புவதற்கான உத்தரவையும் அதிகாரிகள் பிறப்பித்து உள்ளனர். இதனை ஏற்று ஏரியில் தண்ணீர் சேமிப்பதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக நீர் சுத்திகரிக்கும் நிலையம், நீரேற்று நிலையம் போன்றவற்றை சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அமைத்து வருகிறது. விரைவில், சென்னைக்கு குடிநீர் வினியோகம் தொடங்கப்பட உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் நீரின் உபரி நீர்த்தேக்கமாக இந்த புதிய நீர்த்தேக்கம் திகழும். இதில் ஒரு டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story