பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் வெங்காயம் இன்று முதல் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு


பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் வெங்காயம் இன்று முதல் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2020 2:12 AM IST (Updated: 21 Oct 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தி, நுகர்வோர்களுக்கு கூட்டுறவுத்துறையின் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்வது குறித்து தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், சிறப்புப்பணி அலுவலர் முனைவர் க.ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர்கள் ம.அந்தோணிசாமி ஜான் பீட்டர், கு.ரவிக்குமார், எம்.முருகன் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வெங்காய விலை உயர்வு என்பது வழக்கமான ஒன்று. எங்கள் அரசு ஆட்சி கட்டிலில் அமர்ந்தது முதல் கடந்த 10 ஆண்டுகளில் விலை நிலை நிறுத்தும் நிதி மூலமாக வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் பொருட்டு வெங்காயம் அதிக விளைச்சல் உள்ள வெளிமாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்பனை செய்து விலையை கட்டுக்குள் வைத்துள்ளோம்.

வெங்காய விளைச்சல் அதிகம் உள்ள பகுதிகளான மராட்டியம், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் அதிக மழையின் காரணமாக இந்த ஆண்டும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதன் அடிப்படையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் துறை உயர் அலுவலர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த ஆய்வு கூட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி, சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக கிலோ ரூ.45 என்ற விலையில் தரமான வெங்காயம் 21-ந்தேதி (இன்று) முதல் விற்பனை செய்யப்படும். 22-ந்தேதி (நாளை) முதல் தமிழ்நாட்டில் உள்ள இதர பகுதிகளில் வெங்காயம் கூட்டுறவுத்துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படும்.

வெங்காய விலை உயர்வை தினசரி அடிப்படையில் அரசு கண்காணித்து வருகிறது. தேவை மற்றும் வரத்து ஆகியவற்றின் அடிப்படையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தரமான வெங்காயம் கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுமட்டுமன்றி கடந்த 10 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்காணித்து, விலை நிறுத்தும் நிதியின் மூலம் விலையேற்றக் காலங்களில் விலை உயர்வை கட்டுப்படுத்த எங்கள் அரசு உரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story